Thursday, April 21, 2011

ஃபைவ் ஸ்டார் சமையல் !

ஃபைவ் ஸ்டார் சமையல் !

புதிய பகுதி
நிக்கேத்தனா
 வீடுகளில் சமைப்பது பெண்கள்தான் என்றாலும் 'ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்'களில் சமைப்பது 'நளபாகத்து’க்கு காப்புரிமை கொண்டாடும் ஆண்கள்தான்! ஆண்களின் கோட்டையாக இருக்கும் ஸ்டார் ஹோட்டல் சமையல் அறையில் தனக்கென்று ஓரிடத்தை உருவாக்கி இருக்கிறார் 'செஃப்' கவிதா! சென்னையிலிருக்கும் 'ஹோட்டல் சவேரா'வின் தென்னக உணவு மையமான 'மால்குடி’ மணப்பது, கவிதாவின் கைப்பக்குவத்தில்தான்!
கவிதா
''எனக்கு மூணே மூணு அக்கா, மூணே மூணு தம்பி, மூணே மூணு தங்கச்சி. அப்பா, அம்மா, அண்ணிங்க, அத்தான், நண்டு, சிண்டுனு எல்லாத்தையும் சேர்த்தா... எங்க வீட்டுல மொத்தம் ஐம்பது டிக்கெட் தேறும். சுருக்கமா சொன்னா, எங்க வீடு 'குக்’கிராமம். அங்க சமைச்சு பழகிட்டதால... பல நூறு பேர் வரும் இப்படிப்பட்ட ஹோட்டல்ல வேலை செய்றது எனக்கு சிரமமாவே தெரியல!'' என்று ரசிக்க ரசிக்கப் பேசும் கவிதாவின் கைப்பக்குவத்துக்கு... அத்வானி, மு.க.ஸ்டாலின், வைரமுத்து, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, குஷ்பு, சுகாசினி, சுதா ரகுநாதன் என்று பல வி.ஐ.பி. ரசிகர்கள் இருக்கிறார்கள்!
''ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் உணவு வகைகள்னா ஏதோ அரிய பெரிய விஷயம் மாதிரியும், அதுக்கான 'ஹை காஸ்ட்’ சேர்மானங்கள் நம்ம கிச்சனுக்கு எல்லாம் வாய்க்காதுங்கற மாதிரியும் பலரும் நினைச்சுட்டு இருக்காங்க. அது உண்மையில்ல... தாராளமா நம்ம அஞ்சறைப் பெட்டியில இருக்கறதை வெச்சே நம்ம கிச்சன்லயும் 'ஃபைவ் ஸ்டார்' டிஷ்களை மணக்க வைக்கலாம்!'' என்று சொல்லும் கவிதா, 'அவள் விகடன்’ வாசகிகளுக்கு புதுவித, ருசிகர ஸ்டார் சமையலைப் பரிமாறுகிறார்!
இங்கே கவிதா நமக்காக செய்து காட்டி அசத்தியிருப்பது... பசலைக்கீரை பச்சை பூரி!
படங்கள்: கே.ராஜசேகர்
பச்சை பூரி ஜிங்குச்சா... சிவப்பு பூரி ஜிங்குச்சா...
 கீரையைக் கொடுத்தால்... 'வ்வே...' என்று பல குழந்தைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும். ஆனால், கீரையைச் சாப்பிட்டுவிட்டு பத்து பேரை அடிக்கும் கார்ட்டூன் கேரக்டரான பாப்பாய் போன்றவற்றைக் காட்டிவிட்டு, இந்த பசலைக்கீரை பச்சை பூரியை கொடுத்தால்... குழந்தைகள் நிச்சயம் கீரை கட்சிக்கு மாறுவது உறுதி!
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 250 கிராம், கீரை பேஸ்ட் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
கீரையை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். கீரை வேக வைத்த தண்ணீரில் உப்பு கலந்து, கோதுமை மாவு மற்றும் மசித்த கீரையைச் சேர்த்து நன்கு பிசையவும் (முதலில் அதிகமாக தண்ணீர் சேர்த்துவிட்டு, பூரியை உருட்டும்போது அதில் மாவு சேர்த்து சமாளிக்கும் வழக்கமான ஐடியா இங்கே கை கொடுக்காது. பூரி கறுப்பாகிவிடும்... ஜாக்கிரதை!). மாவின் மீது மஸ்லின் துணியன்றைப் போட்டு பத்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். பிறகு, பூரியாக தேய்த்து வாணலியில் கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்தால்... பசலைக் கீரை பச்சை பூரி ரெடி.
முளைக்கீரை, அரைக்கீரை என்று எந்தக் கீரையிலும் செய்யலாம். பீட்ரூட்டை நன்றாகத் துருவி, மிக்ஸியில் அரைத்து பூரி மாவோடு சேர்த்தால்... சிவப்பு பூரி! மாம்பழத்தின் ஜூஸை எடுத்து, பூரி மாவோடு கலந்தால் மஞ்சள் பூரி! இப்படி கிரேப், பப்பாளி என்று எதை வேண்டுமானாலும்  பயன்படுத்திக் குழந்தைகளை அசத்தலாம்!
- பரிமாறுவோம்...
Source - Vikatan Magazine

No comments:

Post a Comment